குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர், சபரிமலை அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட இறங்குதளத்தில் சிக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நான்கு நாள் பயணமாக கேரள வந்திருந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று டில்லியிலிருந்து திருவனந்தபுரம் வந்தடைந்தார். அங்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இன்று காலை, சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனம் செய்ய திருவனந்தபுரத்திலிருந்து பத்தனம்திட்டா நோக்கி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். பத்தனம்திட்டா மாவட்ட உள்விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் ஹெலிபேடில் இறங்கும்போது, ஹெலிகாப்டர் சக்கரம் தளத்தில் சிக்கிக் கொண்டது.
உடனே பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு ஹெலிகாப்டரை தள்ளி சீராக நிறுத்தினர். எந்தவித சேதமும் அல்லது உயிர் இழப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை காரணமாக முன்பாக திட்டமிட்டிருந்த நிலக்கல் இறங்குதளம் மாற்றப்பட்டதால், அவசரமாக புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டிருந்தது. அது முழுமையாக காயவில்லை என்பதே சிக்கலுக்குக் காரணமாக கூறப்படுகிறது.
பின்னர் சாலை வழியாக சபரிமலை புறப்பட்ட குடியரசுத் தலைவர், பம்பை பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து, தேவஸ்வம் போர்டின் “கூர்கா” வாகனத்தில் மலையேற்றப் பாதை வழியாக பயணம் செய்தார். அவருடன் “பிபிஜி” பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் இணைந்திருந்தனர்.
அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த பிறகு, மீண்டும் அதே வழியாக நிலக்கல் வந்தடைந்து, அங்கிருந்து திருவனந்தபுரம் நோக்கி ஹெலிகாப்டர் மூலம் திரும்புவதாக தகவல்.
 
			


















