இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து வசித்து வரும் ஆப்கன் அகதிகள் அனைவரும் தங்கள் நாட்டிற்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்த காலத்தில், பல லட்சக்கணக்கானோர் பாகிஸ்தானை நாடி அகதிகளாக குடியேறினர். ஆண்டுகள் கடந்தும், இவர்களில் பெரும்பாலோர் அங்கிருந்தே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
ஆனால், சமீபகாலமாக பாகிஸ்தான் அரசு, வெளிநாட்டு அகதிகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு சுமையாக உள்ளதாக கூறி, அவர்களை மீண்டும் தாயகத்திற்கே அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஐ.நா. அகதிகள் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த மாதம் வரை சுமார் 15 லட்சம் ஆப்கன் அகதிகள் தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இன்னும் 23 லட்சம் பேர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார்கள். அதில் 13 லட்சம் பேர் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அகதிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ளோர் சட்டபூர்வ அங்கீகாரம் இன்றியே தங்கி வருகின்றனர்.
இதற்கிடையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பதற்றம் நிலவுகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது :
“ஆப்கானிஸ்தானுடன் எங்களின் உறவுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் தஞ்சமடைந்து வாழும் ஆப்கன் அகதிகள் அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும். எங்களின் நிலமும் வளமும் 25 கோடி பாகிஸ்தானியர்களுக்கே உரியது. இனி எங்கள் பிரதிநிதிகளும் ஆப்கானிஸ்தான் செல்லமாட்டார்கள். பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அதற்கு உரிய பதிலை அளிப்போம்,”
எனக் கடுமையாக அவர் எச்சரித்துள்ளார்.
















