ஆப்கானிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வந்தது. இரு நாடுகளின் படையினரும் மோதலில் ஈடுபட்டு பலர் உயிரிழந்த நிலையில், 48 மணி நேர சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணம் பகுதியில் நடைபெற்றது. இதில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் சிப்கதுல்லா, ஹாரூன், கபீர் எனும் மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள் இருப்பதாகவும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கையில், “இந்த வீரர்கள் நட்புறவான போட்டியில் பங்கேற்க உர்குனில் இருந்து ஷரானாவுக்கு பயணம் செய்தனர். திரும்பி வந்தபோது பாகிஸ்தான் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இது கோழைத்தனமான செயல்,” என்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தான் முழுவதும் துயரநிலை நிலவுகிறது. மேலும், இதன் பின்னணியில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு தொடரிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களது துக்கத்தையும், வீரர்களுக்கு அஞ்சலியையும் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இளம் வீரர்களின் மரணம் ஆப்கானிஸ்தான் விளையாட்டு உலகையே உலுக்கியுள்ளது.
 
			

















