நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் பண்பொழி என்ற இடத்தில் திருமலை முத்து குமாரசுவாமி கோயில் அமைந்துள்ளது.
கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் ஒரு சிறிய குன்றில் அமைந்துள்ள இந்த ஆலயம் உள்ள பகுதியில் முற்காலத்தில் ஒரு வேல் மட்டுமே இருந்துள்ளது.
இத்திருமலையில் ஆதிகாளி கோவிலின் அர்ச்சகராக இருந்த பூவன் பட்டர்தான் இங்கு பூஜைகள் செய்துவந்தார். தினமும் அங்கிருந்த வேலுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்த்துவந்தார். ஒருநாள் பூஜையை முடித்துவிட்டு ஒய்வு எடுப்பதற்காக புளியமரத்தடியில் படுத்திருந்தபோது, அவரது கனவில் முருகப்பெருமான் தோன்றி அச்சன்கோயிலுக்குப் போகிற வழியில் புழுதியாற்றுக் கோட்டையில் ஓர் வனத்தில் தான் கோயில் கொண்டிருந்ததாகவும், மழை வெள்ளத்தில் குமரன் கோயில் அழிந்து, குமரப்பெருமானின் திருஉருவம் ஆற்று மணலில் புதைந்தது இருப்பதாகவும். அதை தோண்டியெடுத்து எனக்கு கோவில் எழுப்பவும். நான் புதைந்திருக்கும் இடத்தை ஒற்றை வரிசையாகச் செல்லும் எறும்புக்கூட்டம் நின்று காட்டும் என அடையாளம் கூறினார்.
இதே செய்தியைப் பந்தள அரசர் கனவிலும் தெரிவித்திருப்பதாக முருகன் கூறி மறைந்தார். கனவில் முருகன் இட்ட கட்டளையை ஏற்று பூவன் பட்டரும் பந்தள மன்னரும் முருகன் சிலை புதைந்து கிடந்த இடத்தைக் கண்டுபிடித்து, பயபக்தியுடன் எடுத்து வந்து திருமலையின் மீதுள்ள குவளைப் பொய்கையின் அருகே உள்ள புளியமரத்தினடியில் வைத்து முதன்முதலில் பூஜைகள் செய்தார்கள்.
அப்போது பந்தளத்தை ஆண்ட மன்னர் உடனே மலைமேல் ஏறுவதற்கு வசதியாக 623 படிக்கட்டுக்கள் கொண்ட இக்கோவிலை எழுப்பினார். அந்த படிக்கட்டுகள் ஸ்கந்த கோஷ்டப்பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது.
ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும், நல்ல வாரிசுகள் உருவாகுமென ஐதீகம் உள்ளது.
பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள்தான் பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி இப்பொழுது கேரள எல்லையாக இருக்கிற திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர். இந்த இடத்தை சுற்றிதான் ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை இருக்கிறது. இங்கே ஆதிஸ்தானம்ன்ற ஒரு கோவில் இருக்கிறது. இதுதான் முதலில் வேல் இருந்த இடமாகும்.

இங்கு நாகராஜருக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது. இந்த மூலஸ்தானம் என்று சொல்லப்படுகிற மரம் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான மரமாகும். அதனாடியில் உள்ள சன்னதியை இன்றும் உத்தண்ட வேலாயுதம் எனச்சொல்கிறார்கள்.
பல நூறாண்டுகளுக்கு முன்னர் நெல்லையம்பலம் மயிலப்பன் என்கிற முருக பக்தர்தான் இப்பொழுது இருக்கும் ஆலயதை தொடக்கி முருகன் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து, மானியங்களையும் கொடுத்தாராம்.
அதை தொடர்ந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடகரையார் என்னும் சொக்கம்பட்டி ஜமீன், அம்பலவாண முனிவர் மற்றும் நெல்லை மாவட்டம் நெடுவயலைச் சார்ந்த சிவகாமி பரதேசி என்னும் அம்மையார் ஆகியோர் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
இந்த தலத்து மூலவரான திருமலை முருகன் நான்கு கைகளுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதமும், மேல்நோக்கிய இடது கையில் வச்சிராயுதமும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரமும், கீழ்நோக்கிய இடது கையில் சிம்ம கர்ண முத்திரையுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இம்முருகனுக்குப் பார்வதி தேவி தன் வாயால் அருளிச் செய்த “தேவி பிரசன்ன குமார விதிப்படி எட்டுக்கால பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளியறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லையாம்,மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.
இது திருமலைக்காளி கோவில். இங்கு காளிதேவி மலைமேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலையின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் தனிக்கோயிலாகத் திருமலைக்காளி கோயில் அமைந்துள்ளது. இங்கே காளியம்மன் வடதிசை நோக்கி (கோட்டைத் திரடு) அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
இத்திருக்கோயில் முருகக் கடவுள் பிரதிஷ்டைக்கு முன்பே அமைந்தது என்கிறார்கள். இடும்பன் சன்னதி படிகள் செல்லுமிடத்தின் மேற்கே, தனிச்சன்னதியாக அமைந்துள்ளது. இந்த காளி திருமலையின் காவல் தெய்வமாகும்.
திருமலைக்கோயிலின் உள்பிராகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. ஐந்தரை அடி உயரமுள்ள கம்பீரமான தோற்றத்துடன் பைரவர் இங்கு வீற்றிருக்கிறார்.
இங்கு முருகன் சந்நிதியை அடுத்து 16 படிகள் ஏறிச்சென்றால் விநாயகருக்கென தனி சன்னதி இருக்கிறது. அவர் உச்சிப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நளமூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வவிருத்திக்காக, திருமலைசெடியின் வேரையும், தனகர்ஷ்ண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள்.
இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது பலருக்கு கண்கூடாக நடத்த அனுபவம். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து வழிபட்டால் அவர்கள்வாழ்க்கை விருத்தியாகும் என்பது ஐதீகம்.
‘வி’ என்றால் உயர்வானது, ‘சாகம்’ என்றால் ஜோதி எனப்படும்.‘விசாகம்’ என்றால் மேலான ஜோதி என்று பொருள். இந்த நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக் கிரணங்களை உடையது என்றும், இந்த மூன்று ஒளிக்கிரணங்களும் இந்த மலை மீது படுவதால், விசாக நட்சத்திரக்காரர்கள்
இங்கு வந்து வழிபட, தங்கள் தோ~ங்கள் அனைத்தும் நீங்கி, புனர்வாழ்வு கிட்டுமென்றும், செல்வங்கள் பெருகும் என்றும் விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
இத்திருத்தலத்தின் தீர்த்தமான பூஞ்சுனை,அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. நாள்தோறும் ஒரு தாமரை மலர் இச்சுனையில் மலரும். அதை இந்திராதி தேவர்களும் சப்த கன்னியர்களும் பறித்து முருகனுக்குச் சூட்டி வழிபட்டு வந்த அற்புத தீர்த்தமாகும்.
 
			
















