கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, பாஜக தரப்பில் எதிர்வினை வெளிப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின், இலங்கை விவகாரத்தில் தொடர்ந்து நாடகமாடி வருகிறார். உண்மையில் கச்சத்தீவை மீட்கும் நோக்கம் இருந்தால், பிரதமருக்கு கடிதம் எழுதுவது மட்டும் போதாது, அவரே நேரடியாக அமைச்சர்களுடன் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது :
“மீனவர்களின் நலனைக் கவனிக்காமல், அரசியல் லாபத்திற்காக கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தவர்கள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தான். இந்த உண்மை திமுகவினருக்கே தெரியும். அதே சமயம், இப்போது ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி, பொதுமக்களை மயக்க முயல்கிறார்.”
சக்கரவர்த்தி மேலும் சாடியதாவது, “இலங்கை அதிபர் அனுர குமாரா கடந்த செப்டம்பரில் கச்சத்தீவைப் பார்த்தார். அதுபோல் ஸ்டாலினும் அங்கு சென்று நிலைமையை நேரில் பாருங்கள். அப்போது இலங்கை மக்கள், ‘உங்கள் தந்தை எங்களுக்கு கொடுத்த தீவை, நீங்களே இப்போது கேட்கிறீர்கள், இது நியாயமா?’ என்று கேட்பார்கள். அப்போதுதான் திமுகவின் இரட்டை நிலைப்பாடு வெளிப்படும்,” என அவர் குறிப்பிட்டார்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என ஸ்டாலின் இதற்கு முன்பு 2023 ஏப்ரல் 19, 2024 ஜூலை 2 மற்றும் 2024 ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் பிரதமருக்கு கடிதங்கள் எழுதியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று அவர் நான்காவது முறையாக மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகளைத் தடுக்கவும், அவர்களை விடுவிக்கவும் மொத்தம் 72 முறை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பாலான கடிதங்களிலும் கச்சத்தீவை மீட்பதின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
			















