தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மணப்பாறையில் முறுக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தாயரிக்கப்படும் முறுக்குகளுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு மத்திய அரசு சார்பில் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தயாராகும் முறுக்குகள், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், இங்கு முறுக்கு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அரும்பு முறுக்கு, தேன்குழல் முறுக்கு, கார முறுக்கு, ராகி முறுக்கு, புதினா முறுக்கு, வல்லாரை முறுக்கு, ஓமம் முறுக்கு, பூண்டு முறுக்கு, அச்சு முறுக்கு என மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விதவிதமான சுவைகளில் முறுக்குகள் தயாராகி வருகின்றன. இவற்றை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். வெளிநாடுகளுக்கான பார்சல் கட்டணம் அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.