தமிழகத்தில் 10 ஆயிரம் ஊராட்சிகளில், நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கிராமபுர மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது பற்றி விவாதிக்க, ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெறும். அந்த வகையில், கடந்த அக்டோபர் 2ம் தேதி விடுமுறை என்பதால் நடைபெறவில்லை என்றார்.
முதல்வரின் உரையாடலுக்கு பிறகு தெருவிளக்கு. குப்பை அகற்றுதல், குடிநீர் தேவை, சாலை வசதிகள் உள்ளிட்ட 16 பொருள்கள் குறித்து விவாதிக்கபட உள்ளதாகவும் அவர் கூறினார். இதில், பொதுமக்கள் தெரிவிக்கும் மூன்று முக்கிய பிரச்சினைகளுக்கு, இம்மாத இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்றும், ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
சாலை மற்றும் தெருப் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதி அடையாளங்களை மாற்றுவதற்கும், கிராம சபை கூட்டங்களில் முடிவு செய்யப்படும் என்றும், ககன்தீப் சிங் பேடி கூறினார். கிராமப்புற வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறும் ஏழ்மை குடும்பங்களை, அந்த கிராம மக்களே நாளைய கூட்டத்தில் தேர்வு செய்வார்கள். மாநகராட்சி, நகராட்சிகளுக்கான வார்டு சபை கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும் என்றும் ககன் தீப் சிங் பேடி கூறினார்.