மதுரை : தென்னிந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மதுரையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று திறந்து வைத்தார்.
மதுரை சிந்தாமணி ரிங் ரோடு அருகே, வேலம்மாள் மருத்துவமனை வளாகம் பக்கத்தில், 2023ஆம் ஆண்டிலிருந்து சுமார் ரூ.325 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த மைதானம், சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும்.
20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதியுடன் கூடிய இந்த மைதானத்தில், வீரர்களுக்கான தனித்தனியான ஓய்வறைகள், ஜிம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகள், விசாலமான கார் பார்க்கிங் போன்ற அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மழை பெய்தபோதும் தண்ணீர் தேங்காமல் வெளியேறும் வகையில் 5 அடி ஆழமுள்ள வடிகால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மைதானத்தின் விளக்குகள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நிபுணர்களின் ஆலோசனையுடன் நிறுவப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்த தோனிக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். “தோனி! தோனி!” என முழக்கமிட்ட ரசிகர்களுக்கு கையசைத்து பதிலளித்த அவர், பின்னர் மைதானம் சென்று திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
திறப்பு விழாவுக்குப் பிறகு, சிறிய பேட்டரி காரில் மைதானம் முழுவதும் சுற்றிய தோனி, அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் ரசிகர்களை நோக்கி கையசித்து புன்னகையுடன் வாழ்த்தினார். அவரை நேரில் காண நேர்ந்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்தனர்.
மதுரையில் இவ்வாறு தொடங்கியுள்ள இந்த புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம், அடுத்தடுத்த காலங்களில் பெரிய அளவிலான தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை நடாத்தும் மையமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















