கரூர் அசம்பாவிதம் வழக்கில் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தின் போது கரூரில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவத்துக்குப் பிறகு, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு எதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே, தலைமறைவாக இருந்த மதியழகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் அளித்ததாக கூறப்படும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனர். இதே வழக்கில் தலைமறைவாக உள்ள என். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரிக்க, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டது. அந்த குழு விசாரணையை முன்னெடுத்து வரும் நிலையில், மதியழகனை காவலில் எடுத்து மேலதிக விசாரணை நடத்த அனுமதி கோரி குழுவினர் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவுக்கான விசாரணையில், அரசு தரப்பில், வீடியோ ஆதாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சாட்சிகள் குறித்து மதியழகனிடம் நேரடியாக விசாரிக்க வேண்டியதாயுள்ளது என்று வாதிடப்பட்டது. ஆனால், தவெக தரப்பில், ஏற்கனவே தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளனர் என்பதால் மீண்டும் காவல் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பின் வாதங்களையும் கவனமாக பரிசீலித்த நீதிமன்றம், மதியழகனை 2 நாட்கள் காவலில் எடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க அனுமதி அளித்தது.