நடிகை விஜயலக்ஷ்மி குறித்து அவதூறு பேசியதற்காக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார், இதையடுத்து அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
நடிகை திருமணம் கொள்வதாகக் கூறி குடும்பம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றம் சென்றார். இந்த விவகாரத்தில் மன்னிப்புக் கோரினால், கைது செய்வதற்கு தடைவிதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இதையடுத்து, சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது சொல் மற்றும் செயல்களால் நடிகைக்கு ஏற்பட்ட வலி அல்லது காயத்திற்கு நிபந்தனையின்றி மன்னிப்பு கோருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நடிகைக்கு எதிராகத் தான் கூறிய கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல், எந்த காரணத்துக்காகவும் நடிகையை தொடர்புகொள்ள மாட்டேன் என்றும், ஏதேனும் தேவை ஏற்பட்டால், வழக்கறிஞர்கள் வழியாக மட்டுமே தொடர்பு கொள்வேன். எனவே தனது மன்னிப்பு பிரமாண பத்திரத்தை ஏற்று, தற்போதைய நடவடிக்கைகளை முடித்துவைக்க வேண்டும் என சீமான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி, சீமான் மீதான வழக்கை வாபஸ்பெற தயார் என நடிகை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை நீதிபதிகள் சுமுகமாக முடித்துவைத்து உததரவிட்டனர்.