மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 1951 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் குமாரசாமி ராஜா அவர்களால் பிரசவ மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. தருமபுரம் ஆதீன 24 வது மடாதிபதி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு 25 ஆவது மடாதிபதி ஆட்சிக்காலத்தில் இந்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கட்டிடம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தது. நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதனை கண்டித்து தர்மபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கான திட்டத்தை நகராட்சி நிர்வாகம் ஒத்தி வைத்தது. இந்நிலையில் நாளை பிரசவ மருத்துவமனை வளாகத்தில் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தருமபுரம் ஆதீன மடாதிபதி வெளி மாநில யாத்திரை சென்றுள்ள நிலையில் திமுக நகராட்சி நிர்வாகம் அவசர அவசரமாக பூமி பூஜை போடுவதற்கு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின இதனை அடுத்து தங்களுக்கு சொந்தமான இடத்தை நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக கண்டனம் தெரிவித்து தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள சமூக வலைதள அறிக்கையில் முன்னோர்கள் கட்டிய கட்டிடத்தை உயிர் போகும் வரை அன்பர்களோடு உண்ணாவிரதம் இருந்து காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
