வேலூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜயை அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேலூரில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நிருபர்கள், “கரூர் நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறியதாக செய்திகள் வந்துள்ளன. அதைப்பற்றி உங்கள் கருத்து?” என்று கேட்டனர்.
இதற்கு துரைமுருகன் பதிலளித்ததாவது :
“தான் குற்றமில்லாதவர் என்றால், தைரியமாக நேரில் சென்று அந்த குடும்பங்களிடம் ஆறுதல் கூறியிருப்பார். ஆனால், தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் வெளியே வர அவருக்கு பயம். அதனால் தான் வீடியோ கால் மூலமாக பேசுகிறார்,” என்றார்.
அத்துடன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கச்சத்தீவு தொடர்பான கருத்தை பற்றியும் அவர் பதிலளித்தார்.
“அவருக்கு அந்த விஷயத்தில் எதுவும் தெரியாது. யாரோ சொல்லிக் கொடுத்து பேசுகிறார்,” என்று கூறி சிரித்துக்கொண்டே துரைமுருகன் தனது வாகனத்தில் புறப்பட்டார்.