நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் பகுதியில், தமிழக வெற்றிக் கழக ஒன்றிய பொருளாளர் சக்திவேல் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக உள்ள சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களுக்கு நேற்று கடைத்தெருவில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சக்திவேல் வசிக்கும் ஓட்டு வீட்டின் மீது அடையாளம் தெரியாதவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில், வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பல்சர் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது.
அத்துடன், வீட்டு முன்பக்க கதவும் தீக்கிரையானது. அந்த நேரத்தில் சக்திவேல், அவரது தாய், மனைவி, குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில், அவர்கள் பின்பக்கமாக ஓடி உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு கரியாப்பட்டினம் காவல் ஆய்வாளர் நாகலெட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். குற்றவாளிகளை அடையாளம் காண தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.