மயிலாடுதுறை அருகே அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்க மின்சார துறையினர் ரூபாய் 50,000 கேட்பதாக குற்றம் சாட்டியும், 10 வருடங்களாக இருட்டில் குடியிருந்து வருவதாகவும் குற்றம்சாட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுத்த பெண்கள்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் அருகே உள்ள சவுரியாபுரம் பொட்டதிடல் கிராமத்தில் இலவச வீட்டுமனை குடியிருப்புக்கு மின் இணைப்பு கொடுக்க மின்சாரத்துறையினர் ரூபாய் 50ஆயிரம் பணம் கேட்பதாக குற்றம்சாட்டியும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத சவுரியாபுரம் பொட்டதிடல் பகுதியில் 28 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கடந்த 2004 ஆம் ஆண்டு அரசால் வழங்கப்பட்டது. பத்துக்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வரும் நிலையில் இதுவரை தங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்றும் மின் இணைப்பு பெற ஒரு வீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் தந்தால் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறையினர் கூறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள்,
சாலைவசதி, குடிநீர் வசதி, எதுவுமே இல்லாத பகுதியில் மின்சாரம் இன்றி 10 ஆண்டுகளாக குடியிருந்து தவித்து வருவதாக இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு ககூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த பூம்புகார் எம்எல்ஏவை பார்த்து தங்கள் பிரச்சனைகளை கூறி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். நாளை நேரில் வந்து பார்த்து பிரச்சனைகளை சரி செய்து தருவதாக பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் வாக்குறுதி அளித்து சென்றார்
