நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் மத மோதலை தூண்டும் விதமாக நடந்ததாக கூறி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சட்டமன்ற அலுவலக உதவியாளர் அங்குராஜ் உள்பட மூன்று பேருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆலங்குளத்தைச் சேர்ந்த பாதிரியார் டேவிட் நிர்மல் துரை, சுமார் 20 பேருடன் நடுக்கல்லூர், பட்டன்கல்லூர் பகுதிகளில் ஜெப கூட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து, அந்த பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மணிகண்ட மகாதேவன், அங்குராஜ் மற்றும் அவரது சகோதரர் சங்கர நாராயணன் ஆகியோர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் போது வாக்குவாதம் ஏற்பட்டதோடு, பாதிரியாரை கோவிலுக்குள் அழைத்து சென்று வழிபட வைத்ததாகவும், இனி அந்தப் பகுதிக்கு வரக்கூடாது என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பின்னர், பாதிரியார் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது விளக்கத்தில், “பட்டன்கல்லூரில் வசிக்கும் ஒரு பெண் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால், அவரது குடும்பத்தினர் ஜெபம் செய்ய அழைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அங்குராஜ் மற்றும் இருவருக்கு எதிராக கொலை மிரட்டல், மத மோதல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதே நேரத்தில், பாதிரியார் டேவிட் நிர்மல் துரை வீடுகளுக்குள் சென்று மத மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக மணிகண்ட மகாதேவன் தனியாக புகார் அளித்துள்ளார்.
















