அதிமுக ஒருங்கிணைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்வந்ததை அடுத்து, தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 5-ஆம் தேதி ஊடகங்களை சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி முன் வர வேண்டும்; அதற்கு 10 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன்” என்று அறிவித்தார். இந்த கருத்தை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட அதிமுகவில் பிரிந்த தலைவர்கள் வரவேற்றனர்.
ஆனால் உடனடியாக எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அனைத்து கட்சி பொறுப்புகளிலிருந்தும் நீக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, அதிமுக ஒருங்கிணைப்பைப் பற்றி விவாதித்தார்.
OPS-ஐ சந்தித்தார் செங்கோட்டையன்
செங்கோட்டையன் அளித்த 10 நாட்கள் கெடு நிறைவடைந்துள்ள நிலையில், அவர் அடுத்தடுத்து எவ்வாறு செயல்படுகிறார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நண்பர் வீட்டில் இருவரும் நேரில் சந்தித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அதிமுக அரசியலில் புதிய அலைகளை எழுப்பியுள்ளது.
செங்கோட்டையன், “சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை; என்னைச் சந்தித்தவர்கள் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது” என்று விளக்கமளித்திருந்தாலும், OPS-ஐ அவர் சந்தித்தது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
அடுத்த கட்டம்?
செங்கோட்டையன் – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு அதிமுக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இதற்கு என்ன பதில் கொடுக்கப்போகிறார் என்பதுவும் தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.

















