ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 10 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் இன்று சரணடைந்துள்ளனர். இதற்கு முன்னர், நேற்று கும்லா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
கும்லா மோதலுக்குப் பிறகு மாநில டிஜிபி அனுராக் குப்தா, “2026ம் ஆண்டின் விடியலை நக்சலைட்டுகள் காண முடியாது; ஆயுதங்களை கைவிட்டு வழக்கமான வாழ்வுக்கு திரும்ப வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, சாய்பாசா பகுதியில் மாநில அரசின் மறுவாழ்வு கொள்கையின் கீழ் நடைபெற்ற சரணடைதல் நிகழ்வில் சிபிஐ அமைப்பைச் சேர்ந்த 10 நக்சலைட்டுகள் – இதில் நான்கு பெண்களும் அடங்குவர் – தங்களின் ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரணடைந்தனர்.
ஒரே நாளில் இத்தனை பேரின் சரணடைதல் சமீப காலத்தில் நடந்த மிகப்பெரியதாகும். தற்போது நக்சலைட்டுகள் பெரும்பாலும் சரண்டா காட்டுப்பகுதிக்குள் மட்டுமே இயங்குவதாகவும், அங்கு இன்னும் சிலர் மறைந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தக் காடுகளில் ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் சவாலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

















