அதிமுகவில் நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “எப்போதும் அதிமுக இரண்டாகப் பிளந்துவிட்டது, மூன்றாகப் பிளந்துவிட்டது என்று பேசுகிறார்கள். அது எங்கள் பிரச்சினை, நாங்களே பார்த்துக்கொள்வோம். எந்தக் கட்சி பதவி கொடுத்து அழகு பார்த்ததோ அந்தக் கட்சியின் அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்கள்தான் இன்று ஒன்றிணைப்பு கேட்டு வருகிறார்கள். அந்த துரோகிகளை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று யாராவது சொல்வதற்கு அவர்களே யார்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதன் மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை சண்முகம் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் மற்றும் கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. செங்கோட்டையன், நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார். கூடுதலாக, டெல்லியில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் இணைப்பது சாத்தியமில்லை என்று முன்பே உறுதி செய்து விட்டார். இந்த சூழ்நிலையில், சிவி. சண்முகத்தின் கடும் பேச்சு, செங்கோட்டையனின் முயற்சிகளை மறைமுகமாக தாக்குவதாகவும், அதிமுகவில் இணைப்பு சாத்தியம் முற்றிலும் இல்லையென முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

















