தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவரது சுற்றுப்பயண அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். தொடர்ந்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் செப்டம்பர் 20ஆம் தேதி 2ஆம் கட்ட பிரசாரத்தில் கலந்துகொண்டார்.
இதன்படி, வரும் 27ஆம் தேதி விஜய் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என தவெக தலைமை அறிவித்துள்ளது. முன்னதாக, இதே தேதிகளில் வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் விஜயின் சுற்றுப்பயணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
அதேபோன்று, அக்டோபர் 4, 5ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விஜய் பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அந்த தேதிகளில் அவர் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காவல்துறை அனுமதி உள்ளிட்ட பணிகள் தற்போது தவெக நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.