விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் புகழைப் போற்றும் வகையில், வேலூரில் இயங்கிவரும் காவல் பயிற்சிப் பள்ளிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர், “விடுதலை வீரர்களின் நினைவுகளை நிலைநாட்டுவது நமது திராவிட மாடல் அரசின் தலையாய கடமை” என்று வலியுறுத்தியுள்ளார்.
அரசு பொறுப்பேற்ற பின், வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரச் செயலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், 2023ஆம் ஆண்டின் குடியரசுத் தின அணிவகுப்பில் அவரது திருவுருவச் சிலை இடம்பெற்றது, இசையார்ந்த நாட்டிய நாடகமாக அவரது வாழ்க்கை வரலாறு அரங்கேற்றப்பட்டது என்பன முக்கியமானவை.
மேலும், சமீபத்தில் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வேலுநாச்சியாரின் சிலை திறந்து வைக்கப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அதன் தொடர்ச்சியாகவே வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்படுவதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், “மண், மானம் காக்க புயலென எழுந்த வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாறும், அவருக்கு துணை நின்ற மருது சகோதரர்கள் உள்ளிட்ட பல தீரமிக்க தமிழர்களின் போராட்ட வரலாறும், தமிழகம் தலைகுனியாத பெருமையை உரக்கச் சொல்கின்றன” எனக் குறிப்பிட்டார்.
















