தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடத்தும் பிரச்சார கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தேசிய மகளிர் பிரிவு தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியல் கட்சிகள் ஊர்வலங்கள் அல்லது பெரிய கூட்டங்கள் நடத்தும்போது அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடையக் கூடாது. அதற்காகவே தனி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கூட்டம் கூடினாலே அராஜகம் செய்யலாம் என்ற மனப்போக்கு யாருக்கும் வரக்கூடாது. இது பொதுமக்கள் நலனுக்கும், பொது ஒழுங்குக்கும் எதிரானது,” என்று குறிப்பிட்டார்.
மேம்பாட்டு திட்டங்கள்
தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 19.5 லட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்குடை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுகிறது என்றும், அதில் எலக்ட்ரானிக் போர்டு, வைஃபை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன என்றும் வானதி கூறினார்.
ஜிஎஸ்டி குறைப்பு – பெண்களுக்கு பலன்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளதால், குடும்பச் செலவில் சேமிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் பெண்களுக்கு நன்மை ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதை கொண்டாடும் விதமாக அக்டோபர் முதல் வாரத்தில் கோவையில் பிரம்மாண்ட விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு நேரடி புகார் அளிக்காமல், பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இது விரக்தியால் தோன்றியது என்று வானதி சீனிவாசன் விமர்சித்தார்.
திமுக ஆட்சி – “ரவுடிகளுக்கு ஆதரவு”
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் வானதி குற்றம்சாட்டினார். “திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்சி” என்று அவர் கடுமையாக தாக்கி கூறினார்.