நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 64 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலத்தின் உறுதி தன்மை குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு.
ஈரோடு ,நாமக்கல் ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில், பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் நடுவே காமராஜர் முதல்வராக இருந்தபோது 1960 ஆம் ஆண்டு 32 பில்லருடன், பாலம் கட்டப்பட்டது. பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும் அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி இன்றளவும் பாலம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. நாமக்கல் ஈரோட்டை இணைக்கும் மிக முக்கியமான பாலமாக இது உள்ள நிலையில் பாலம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 64 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
பாலத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே சிறிய அளவிலான விரிசல்களும் ,பாலப் பகுதியில் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்தும் காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் முறையாக மின்விளக்குகள் எரியாமலும், கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையிலும் காணப்படுகிறது. எனவே காவிரி ஆற்று பழைய பாலத்தை முழுமையாக சீரமைத்து தரவேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்தியில் கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் ,பாலத்தின் உறுதித் தன்மை குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பாலத்தின் மேற்பரப்பில் உள்ள கான்கிரீட் தளம், பாலத்தின் இரு புறத்திலும் உள்ள பாதுகாப்பு சுவர், பாலத்தின் உயரம், அகலம், நீளம், விரிசல் பாலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
















