திருநெல்வேலியில், வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன், பொதுமக்கள் எடுத்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காந்திராஜன், நெல்லை மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்தார். இதய சிகிச்சை காரணமாக அவர் தனிப்பட்ட காரில் பணிக்கு வருவதும் செல்வதும் வழக்கம்.
நேற்று இரவு பணியில் இருந்து வீடு திரும்பிய அவர், தெற்கு மவுண்ட் ரோடு வழியாகச் சென்றபோது, முன்னால் சென்ற பஸ்சை பின் தொடர்ந்து வந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை இயக்கியபோது, முன் நின்றிருந்த வாலிபர் காரின் மேல் ஏறி சிக்கினார்.
அவரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் எடுத்த வீடியோவில் பதிவானது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் நடந்த விசாரணையில் காந்திராஜன் மது போதையில் இருந்ததும், ஒழுங்கின்மை நடந்ததும் உறுதி செய்யப்பட்டதால், கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். மேலும், அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.