தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சியும் சமீபத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.
கடந்த 13ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற 2வது மாநில மாநாட்டிற்குப் பிந்தைய தினம், விஜய் முதல்முறையாக மக்களிடம் நேரடியாக பரப்புரை மேற்கொண்டார். அன்றைய தினம் அவர் திருச்சியில் வந்ததையடுத்து, நகரமே மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. பெரும் திரளான மக்களை கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலையால், விஜய் திட்டமிட்டிருந்த பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரத்தில் ஈடுபடுவதாக விஜய் அறிவித்திருந்தார். ஆனால், ஒருநாள் மட்டுமே சுற்றுப்பயணம் நடைபெறுவதால், அவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதால் ஒழுங்கமைப்பில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விஜயின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் சனிக்கிழமைகளில் 3 மாவட்டங்களுக்கு விஜய் செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இனி அவர் 2 மாவட்டங்களில் மட்டுமே பிரசாரத்தை மேற்கொள்வார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த வகையில், வரும் செப்டம்பர் 20ஆம் தேதி விஜய் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பரப்புரை செய்ய உள்ளார். கடந்த சனிக்கிழமையன்று அவர் 3 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாலும், இறுதியில் திருச்சி மற்றும் அரியலூரில் மட்டுமே மக்கள் சந்திப்பு நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















