காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் கமிஷன் அதிர்ச்சி குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கு தாக்குதல் நடத்தி 251 பேரை பிணைக் கைதிகளாகக் கொண்டு சென்றனர். அதற்கு பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேல், காசா மீது போரைத் தொடங்கியது. இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில் இதுவரை 62,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் பலர் உயிரிழப்பதும் தொடர்கிறது.
இந்நிலையில், “காசாவில் இனப்படுகொலை நடைபெறுகிறது” என்று ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்த இஸ்ரேல் தூதர் டேனியல் மெரோன், “இந்த அறிக்கை போலியானது; ஹமாஸ் தயாரித்தது போன்றது. உண்மைக்கு புறம்பான அவதூறு” என மறுப்பு தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், “இனப்படுகொலை செய்ய முயன்றது ஹமாஸ் தான். 1,200 பேரை கொன்று, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது, குடும்பங்களை உயிருடன் எரித்தது. யூதர்களைக் கொல்வதே ஹமாஸின் இலக்கு” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேசமயம், “போரில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்துவது இஸ்ரேல் தான். நம் மக்களை பாதுகாத்து, பிணைக் கைதிகளை மீட்பதே எங்களின் குறிக்கோள்” எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா. குற்றச்சாட்டுக்கு எதிராக, ஹமாஸின் அட்டூழியங்களை மறைத்து, யூத அரசை குற்றவாளியாக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது என்றும் இஸ்ரேல் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.