தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, இன்று மட்டும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு ஆந்திரா–தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்திஸ்கர் பகுதிகளில் கரையை கடக்கிறது. இதன் தாக்கத்தால் தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மழை முன்னறிவிப்பு :
செப்டம்பர் 15 : திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் கனமழை – ஆரஞ்ச் அலர்ட்.
செப்டம்பர் 16 : ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை.
செப்டம்பர் 17 : கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 21 மாவட்டங்களில் கனமழை.
செப்டம்பர் 18 : நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை.
வானிலை ஆய்வு மையம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.















