தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தனுஷ், படத்தின் உருவாக்கம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
“இந்தப் படத்தின் தலைப்பு பற்றி பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், இந்தக் கதையின் நாயகன் உண்மையில் ‘இட்லி கடை’தான். என் குழந்தைப் பருவ நினைவுகள் தான் இந்தக் கதைக்கான தூண்டுகோல். சிறுவயதில் நான் என் அக்காவுடன் சேர்ந்து பூப்பறிக்கச் சென்று இரண்டு ரூபாய் சம்பாதித்தோம். அந்த உழைப்புக் காசில் வாங்கிய இட்லி, எந்தப் பெரிய ஹோட்டலில் சாப்பிட்ட உணவுக்கும் இணையாக இருக்கவில்லை. அந்த அனுபவமே இந்தக் கதை உருவாக காரணம்,” என அவர் கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்தார் :
“நம் பூர்வீகம், முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை – இவை தான் நம்முடைய அடையாளம். அதை மறந்து விடக் கூடாது. நான் வளர்ந்த தெருக்களிலும், சாப்பிட்ட இட்லிக்கடையிலும், கும்பிட்ட கோவிலிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. எனது பாட்டியும் ஒரு காட்சியில் நடித்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி.
ரசிகர்களை சந்திக்கும் போது, அவர்கள் ‘நான் டாக்டர், நான் ஆர்கிடெக்ட், நான் ஐஏஎஸ் படிக்கிறேன்’ எனக் கூறுவது பெருமையாக இருக்கிறது. சினிமாவை ரசித்தாலும், தங்கள் வாழ்க்கையை சிறப்பாக உருவாக்கிக் கொள்வது எனக்கு பெரும் திருப்தியை அளிக்கிறது,” என்று தனுஷ் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
‘இட்லி கடை’ திரைப்படம் தனுஷின் மனதிற்கு நெருக்கமான படைப்பாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
















