கேங்க்டாக் : சிக்கிமில் நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பலி எடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு சிக்கிம் மாவட்டம், யாங்தாங் தொகுதியிலுள்ள ரிம்பி பகுதியில் இடைவிடாத கனமழையால் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் ஒரு வீடு இடிபாடுகளில் புதைந்து விபத்து ஏற்பட்டது.
இதில், தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் மீட்பு படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில், ஒரு பெண் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிக்கிமில் கனமழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, ஒரே குடும்பத்தில் நால்வர் உயிரிழப்புக்கும், மூவர் மாயமாவதற்கும் காரணமாகி, அந்தப் பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.