மதுரை: “எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. உதயநிதி ஸ்டாலின் சொன்னது உண்மை தான்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமமுக அனைத்து தரப்பினரும் வளர்ச்சி அடைய செயல்படும் இயக்கமாகும். தேவர் பெயர் மதுரை விமான நிலையத்துக்கு சூட்டப்பட வேண்டும் என நான் பல ஆண்டுகளுக்கு முன்பே வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால், வன்னியர் உள் ஒதுக்கீடு காரணமாக தென் தமிழகத்தில் சமூக அமைதி குலைந்தது. இதை அரசியல் காரணமாக பயன்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதைப்பற்றி நான் சொன்ன கருத்தை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு தூண்டப்பட்டு செயல்பட்டுள்ளனர்” என்றார்.
மேலும் அவர், “தமிழகம் தேர்தல் வெற்றிக்கு அப்பாற்பட்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இதுபற்றி எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். ஆனால் அதையும் அவர் அரசியல் நோக்கத்துக்காகவே பயன்படுத்துகிறார். நயினார் நாகேந்திரன் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால், ஓ.பி.எஸ். விவகாரத்தில் அவர் நடந்துகொண்ட விதம் பிடிக்கவில்லை. அவர் நல்ல நண்பர்; எப்போதும் என்னை சந்திக்கலாம்” என்றார்.
அதிமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்த தினகரன், “உதயநிதி சொன்னது உண்மை தான். துரோக சிந்தனை கொண்ட பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது. பாஜக மற்ற மாநிலங்களில் செயல்பட்டாலும், தமிழ்நாட்டில் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளவில்லை. பழனிசாமிக்காக காவடி தூக்கும் அதிமுகவினர், இறுதியில் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அம்மாவுக்கு கோவில் கட்டியவர்கள், அம்மாவின் ஆன்மாவை துரோகம் செய்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக அவர், “அவரை ஜெயலலிதா நீக்கியது அரசியல் காரணத்தால் அல்ல, தனிப்பட்ட காரணத்திற்காகவே. அதனால், அவரின் முயற்சிகள் வெற்றி பெறாது. எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அதிமுக தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டாத கனியாகவே இருக்கும். எங்கள் வழி தனி வழி; எங்கள் கூட்டணிதான் ஆட்சியில் அமரும்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் 2026 தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டில் பேசியபோது, “அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டாலும், காப்பாற்றும் மருத்துவராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இபிஎஸ் தொடர்வதே எங்களுக்கான எளிதான பாதை” என சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.