மயிலாடுதுறையில் அரசால் தடைசெய்யப்பட்ட 740 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல், இருவரை கைது:- குட்கா விற்பனை மற்றும் கடத்தல் புகார்களை தெரிவிக்க இலவச உதவி எண் அறிவிப்பு:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் சிறப்பு வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மயிலாடுதுறை உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டபோது, நான்கு சக்கர சரக்கு வாகனத்தில் சட்டவிரோதமாக குட்கா பொருள்களை கடத்தி வந்த இருவர் போலீஸாரைக் கண்டதும் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்ததில், 740 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்ததும், அவர்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப்(34), உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான புகார்களை இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசி எண் 96261-69492 என்ற எண்ணிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 
			
















