தஞ்சாவூர்: பாமக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலினை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை, ஸ்டாலின் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, போலி பதிவெணியுடன் வந்த கார் மூலம் வந்த மர்ம நபர்கள் கையில் கத்தி, அரிவாள், நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் வீசிய வெடிகுண்டால் அலுவலகம் முழுவதும் பதற்றம் நிலவிய நிலையில், இருவர் — இளையராஜா, அருண் ஆகியோர் கடுமையாக காயமடைந்தனர். சில நொடிகளில் தாக்குதலை நடத்திவிட்டு, கும்பல் காரில் தப்பிச் சென்றது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்த ஸ்டாலினின் ஆதரவாளர்கள் சாலையில் மறியல் நடத்தி, டயர்கள் கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆடுதுறை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியது.
சம்பவம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேசிய ம.க. ஸ்டாலின், “தாக்குதலின் போது கழிப்பறையில் பதுங்கி உயிர் தப்பித்தேன். கூலிப்படையை யார் ஏவினர்? யார் பொருளாதார உதவி செய்தனர்? போலீசார் முழுமையாக விசாரிக்க வேண்டும்,” எனக் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், தாக்குதலாளர்கள் பயன்படுத்திய கார் போலி பதிவெணியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார் விழுப்புரம்–புதுச்சேரி சாலையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, காரில் இருந்தவர்கள் வாகனத்தை சாலையோரம் விட்டுவிட்டு தப்பியோடியதாகவும் தெரியவந்துள்ளது.
தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.