அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், “பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்தால்தான் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும்” என்று கூறியுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரிந்து சென்றவர்களை மறப்போம், மன்னிப்போம் என்ற மனநிலையில் ஒன்றிணைக்க வேண்டும். இதற்காக 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான மனநிலையில் உள்ள தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். வெளியே சென்றவர்களில் பலர் அதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். தென் மாவட்ட மக்களின் ஆதரவை பெற வேண்டுமெனில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனின் இந்தக் கருத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்ட அறிக்கையில், “செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அண்ணா திமுக ரத்தம்தான் என்பதை அவர் நிரூபித்துள்ளார். கட்சி ஒன்று பட வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கை. அதையே அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். தமிழக மக்களின் எதிர்பார்ப்பும் இதுதான். ஒன்றுபட்ட வலிமையான அண்ணா திமுக மட்டுமே ஆட்சி மாற்றத்தை உருவாக்கும்” என தெரிவித்துள்ளார்.