நெல்லை: “அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்றலாம்” என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்திய கருத்துக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்படி வரிக் குறைப்புகள் செய்து மக்களுக்கு நன்மை செய்தாரோ, அதுபோலவே தமிழ்நாட்டிலும் மக்களுக்கு நன்மை செய்யும் மாற்று ஆட்சி தேவை. அந்த மாற்று ஆட்சி நிச்சயமாக எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து உருவாகும்.
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் குறித்து கருத்து சொல்லுவது சரியில்லை. அவர்கள் இதுவரை ஒன்றாக இருந்தவர்கள். அந்த விவகாரத்தை அவர்கள் தான் பேசி தீர்மானிக்க வேண்டும். எனது பார்வையில், அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை அகற்றுவது சாத்தியம்.
ஒற்றுமையை வலியுறுத்துவது நல்ல விஷயம். அரசியலில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. இன்னும் தேர்தலுக்கு 7 மாதங்கள் உள்ளன. கடைசி ஒரு மாதத்தில் கூட பெரிய மாற்றங்கள் நிகழலாம். ஆட்சி மாற்றம், காட்சி மாற்றம் வரும்,” என்று அவர் கூறினார்.