சேலம் : ஓமலூர் அருகே செவிலியர் கல்லூரியில் படிக்கும் மாணவியை பஸ்சில் சீண்டிய 50 வயது நபர், பொதுமக்கள் தாக்கிய பின் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்த 20 வயது மாணவி, தாரமங்கலத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று காலை, அவர் அரசு பஸ்சில் ஓமலூரில் இருந்து கல்லூரிக்கு வந்துகொண்டிருந்தார்.
அதே பஸ்சில், ஓமலூர் பொட்டியபுரம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த பச்சியப்பன் பயணித்தார். பெரியாம்பட்டி அருகே வந்தபோது, பஸ் கண்ணாடியை தள்ளுவதுபோல் நடித்துக்கொண்டு, மாணவியிடம் அவர் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
தாரமங்கலத்தில் பஸ் வந்ததும், சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் பச்சியப்பனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர் தாரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார், பச்சியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
			

















