இந்தியாவுடன் வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்தும் ஜெர்மனியின் தீர்மானத்தை பாராட்டுகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். இந்த நிலையில், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல்லை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், “பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது. பொருளாதாரம், பருவநிலை மாற்றம், பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்தியாவுடன் வர்த்தகத்தை இருமடங்காக அதிகரிக்க விரும்பும் ஜெர்மனியின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல், ஏற்றுமதி கட்டுப்பாட்டு பிரச்சினைகளை சரி செய்யும் நடவடிக்கையையும் பாராட்டுகிறோம்” என்றார்.
அவர் மேலும், “செமிகண்டக்டர் துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜெர்மனி முன்வருவது பாராட்டத்தக்கது. அதேபோல பசுமை ஹைட்ரஜன் துறையிலும் இரு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியா–ஜெர்மனி உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது” என்றும் குறிப்பிட்டார்.
ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் வடேபுல் கூறுகையில், “இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் ஜெர்மனி, இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கும்” என தெரிவித்தார்.