தியான்ஜின் : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25வது உச்சி மாநாட்டில், இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாட்டு தலைவர்கள் ஒருங்கிணைந்த நட்புறவு காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சீனா, ரஷ்யா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்களும், பல்வேறு பார்வையாளர் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர் தொடக்கம் முதலே அன்பான உரையாடலில் ஈடுபட்டு, சிரித்தபடி ஒன்றாகக் கட்டியணைத்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். இது மாநாட்டின் முக்கிய சிறப்பாக அமைந்தது.
உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்காவின் அழுத்தத்தையும் கூடுதல் வரிகளையும் பொருட்படுத்தாமல், ரஷ்யாவுடன் இந்தியா உறுதியான உறவைத் தொடர்ந்து வந்துள்ளது. அதேபோல், எல்லை பிரச்சினைகளைத் தீர்த்து சீனாவும் இந்தியாவுடன் சுமுக உறவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, ஷாங்காய் உச்சி மாநாட்டில் மூன்று நாட்டு தலைவர்களின் செயல்பாடுகள், “நாங்கள் போட்டியாளர்கள் அல்ல; வளர்ச்சிக்கான பங்காளிகள்” என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில் அமைந்தன.