மயிலாடுதுறை அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதியை வழங்காமல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி. நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பயனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவருக்கு கடந்த 2017 -18 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணையை கடந்த 2024 ஆம் ஆண்டு ஊராட்சி பொறியாளர் ஜீவானந்தம் என்பவர் பயனாளி சௌந்தரராஜனிடம் வழங்கியுள்ளார். அந்த ஆணையை படித்து பார்த்த போது அதில் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூபாய் 26,029 வங்கி கணக்கு மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கோபமாக பதில் அளித்து அலட்சியம் செய்து உள்ளனர். இது தொடர்பாக சௌந்தரராஜன் தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எந்தவித நீதியும் அவரது வங்கிக்கு வராததும் மாற்று வங்கி கணக்கை பயன்படுத்தி ஆள்மாளாட்டம் செய்து நிதியை மோசடி செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த 29.08.2025 ஆம் தேதி அன்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சவுந்தரராஜனுக்கு ஓர் அறிவிப்பானை வந்துள்ளது. அதில் தங்களுக்கு அளிக்கப்பட்ட குடியிருப்பு திட்ட நிதியை வீடு கட்ட உபயோகம் செய்யாமல் முறைகேடு செய்ததாகவும் இதனால் தங்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சௌந்தரராஜன் உரிய ஆதாரங்களுடன் தனக்கு அநீதி இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் இதுபோல் முறைகேடுகள் நடந்துள்ளது எனவே இது போன்ற மோசடிகளை கண்டுபிடிக்க தனி குழு அமைத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அரசு வழங்கும் திட்டங்கள் சாமானியர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
