சீனாவின் தியான்ஜினில் நேற்று துவங்கி இன்று நிறைவு பெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. மாநாட்டின் ஓரங்கமாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கையும், ரஷ்ய அதிபர் புடினையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்திருப்பது, மேலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்ற அமெரிக்காவின் வலியுறுத்தல் ஆகியவை, இந்த சந்திப்பில் முக்கியமாக பேசப்பட்டன. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத அபராத வரி தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்புக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் புடினுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி,
“ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

















