தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சராகப் பதவியேற்ற 40 மாதங்களில் நான்கு முறை வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலின், தற்போது ஐந்தாவது முறையாக பயணம் மேற்கொண்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர், “ஸ்டாலின் ஈர்த்த முதலீடுகள் மற்ற மாநில முதல்வர்கள் ஈர்த்த முதலீடுகளை விட மிகவும் குறைவானது. ஆட்சி முடிவடைய 8 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த பயணம் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது குடும்ப முதலீடுகளைச் செய்யவா என்பது மக்களிடையே கேள்வி எழுப்புகிறது. இதுவரை எந்த வெளிநாட்டு முதலீட்டுத் தகவலும் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படவில்லை. குறைந்தபட்சம் இம்முறை தமிழ்நாட்டிற்கு தேவையான முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதேபோல், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி, “திமுக ஆட்சியின் நான்கு ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துவிட்டதா? திமுகவின் முதலீடு பச்சைப்பொய்தான். உண்மையில் முதலீடுகள் வந்திருந்தால் அதுகுறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிரூபிக்கட்டும்” என்று சவால் விடுத்துள்ளார்.
இதனால், முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்த வெளிநாட்டு பயணத்தைச் சுற்றி அரசியல் வட்டாரத்தில் கடும் விவாதம் கிளம்பியுள்ளது.