வாஷிங்டன் : ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா மீது அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள கடுமையான விமர்சனங்களை, அமெரிக்க யூதர்கள் அமைப்பு எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சமீபத்தில் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தது, இரு நாடுகளின் வர்த்தக உறவுகளில் விரிசல் ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், இந்தியா ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை குறிவைத்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, “மோடியின் போர் தான் உக்ரைன்-ரஷ்யா போர். இந்தியா ரஷ்யா போர் இயந்திரத்துக்கு உதவுகிறது. இந்தியா செலுத்தும் பணத்தால்தான் ரஷ்யா உக்ரைனியர்களை கொன்று குவிக்கிறது” என்று சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அமெரிக்க யூதர்கள் அமைப்பு கண்டனம் வெளியிட்டு, “உக்ரைன் மோதலுக்கு இந்தியா பொறுப்பல்ல. அமெரிக்க அதிகாரிகளின் தவறான விமர்சனங்கள் தொந்தரவை ஏற்படுத்துகின்றன. இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நம்பியிருப்பது எங்களை வருத்துகிறது. ஆனால் புடினின் போர்க்குற்றங்களுக்கு இந்தியா பொறுப்பல்ல” என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா-இந்தியா உறவுகளை மீண்டும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே, இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்க முடிவுக்கு, அந்நாட்டு காங்கிரஸின் வெளியுறவு கொள்கை குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
















