மயிலாடுதுறையில் திரும்பிய பக்கம் எல்லாம் விநாயகர் சிலைகளாக, வீட்டையே கோயில்போல் மாற்றிய விநாயகர் பிரியை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2000 விநாயகர் சிலையை கொலுகாட்சிப் படுத்தி பரவசம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவேரி நகரை சேர்ந்தவர் ராஜி பாஸ்கரன். தனது வீட்டில் கடந்த 34 வருடங்களாக நவராத்திரி கொலு கண்காட்சி நடத்தி வரும் இவர், கொலுவில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளில் ஆர்வம் கொண்டு அதனை பிரத்தியேகமாக சேகரிக்கத் தொடங்கினார். அந்த வகையில் கடந்த 25 ஆண்டுகளில் அவர் 2,000-க்கு மேற்பட்ட விநாயகர் உருவச்சிலைகளை வாங்கி அவற்றால் தனது வீடு முழுவதும் அலங்கரித்துள்ளார். எந்த ஊருக்கு சென்றாலும், எந்த கோயில் நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் இவர் விரும்பி வாங்குவது விநாயகர் உருவ பொம்மைகளை தான். விநாயகர் மீது இவர் கொண்ட ஆர்வத்தை கண்ட இவர்களது உறவினர்களும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றாலும் இவர்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகளை தந்துவிட்டு போகிறார்கள். இவ்வாறு ஒரு அங்குலம் முதல் ஒரு அடிவரை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இவர் சேகரித்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட விநாயகர் உருவச்சிலைகளை கொண்டு கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் கொலு அமைத்து வழிபட்டு வருகிறார் இந்த விநாயகர் பிரியை. பள்ளிகொண்ட பெருமாள், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், நடராஜர் உள்ளிட்ட பல்வேறு ரூபங்களில் அமைந்துள்ள விநாயகர் சிலைகள் காண்போரை கவரும் வகையில் உள்ளன. மேலும் இவர் தனது கைகளாலேயே பல விநாயகர் சிலைகளையும் செய்துள்ளார். வீடு முழுவதும் விநாயகர் சிலைகளால் அலங்கரித்த ராஜி பாஸ்கரன் விநாயகர் மீது தான் கொண்ட பக்தியை தனது கையில் பச்சை குத்தியும் வெளிப்படுத்தியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவரது வீட்டில் விநாயகபெருமான் 3 நாள்கள் கொலுவில் அமர்ந்து அருள்பாலிக்க உள்ளார்.
