பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை அவதூறாக விமர்சித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“ராகுலிடம் சிறிதளவு நல்லெண்ணம் இருந்தாலும், அவர் பிரதமர் மோடிக்கும், அவரது மறைந்த தாயாருக்கும், இந்திய மக்களுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் அனைவரையும் வேதனைப்படுத்தியுள்ளது” எனக் கூறினார்.
அமித்ஷா மேலும் தெரிவித்ததாவது :
“மோடியின் தாயார் ஏழைக் குடும்பத்தில் வாழ்ந்தும், தனது குழந்தைகளை நல்லெண்ணத்துடன் வளர்த்தார். அவரைப் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது இந்திய மக்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வீழ்ச்சி. நான் அதைக் கண்டிக்கிறேன்.”
அதோடு, ராகுல் காந்தி நடத்திய நடைபயணத்தில், பிரதமர் மோடியின் தாயாருக்கு எதிராக அவதூறாக பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், காங்கிரஸ் கட்சியே அரசியலில் வெறுப்பு கலாச்சாரத்தை பரப்புகிறது என்றும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
“காங்கிரஸ் எவ்வளவு துஷ்பிரயோகம் செய்கிறதோ, அதற்கேற்ற அளவில் பாஜக வெற்றியைப் பெறுகிறது. பீஹாரில் ராகுல் நடைபயணம் மூலம் மக்களை தவறாக வழிநடத்துகிறார்,” எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

















