ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு மீண்டும் தோல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மூக்கின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிளார்க், “நான் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். மூக்கின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது. வருவதற்கு முன் காப்பதே சிறந்தது. எனக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்ததே, புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவியது,” என தெரிவித்துள்ளார்.
44 வயதான கிளார்க், 2006-ஆம் ஆண்டு முதன்முதலாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்து 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கிளார்க், மொத்தம் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 17,112 ரன்கள் குவித்துள்ளார்.
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக ஆஸ்திரேலியாவில் தோல் புற்றுநோய் அதிகமாக ஏற்படுகிறது. அந்நாட்டில் மூன்றில் இரண்டு பேருக்கு 70 வயதிற்குள் இந்த நோய் கண்டறியப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.
இதற்கு முன்னர், ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மனும் இதே வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















