ஆன்லைன் நேர்காணலில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலையைப் பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதால், இனி நேரில் நேர்காணலை கட்டாயமாக்கும் நடவடிக்கையை கூகுள் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
சமீப ஆண்டுகளில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆன்லைன் வழியாகவே ஆட்கள் தேர்வு நேர்காணல்களை நடத்தி வருகின்றன. ஆனால், இதன் போது விண்ணப்பதாரர்கள் ஏ.ஐ. கருவிகளை பயன்படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கின்றனர். ஆன்மோடு போல காட்சிப்படுத்தும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, தங்கள் உண்மையான திறமையை மறைத்து வருகின்றனர்.
இதனால், நேர்காணலில் காட்டும் திறமைகள் மற்றும் வேலைக்கு சேர்ந்த பின் காணப்படும் செயல்திறன் இடையே பெரிய வேறுபாடு உருவாகி, நிறுவனங்கள் சிக்கலில் சிக்கி வருகின்றன.
இதுகுறித்து சுந்தர் பிச்சை,
“இனி கூகுளில் இன்ஜினியரிங் மற்றும் ப்ரோகிராமிங் பணிகளுக்கான நேர்காணல் ஆன்லைனில் நடைபெறாது. குறைந்தது ஒரு கட்டத்திலாவது விண்ணப்பதாரர்கள் நேரில் கலந்து கொள்ள வேண்டும். எங்கள் நிறுவனத்தில் சேரும் நபர்களுக்கு கணினி அறிவியல் தொடர்பான அடிப்படை புரிதல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது”
என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளிவந்த ஆய்வொன்றில், ஆன்லைன் நேர்காணலில் பங்கேற்போரில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏ.ஐ. கருவிகளை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
பல நிறுவனங்கள் ஒரே தீர்மானம்
கூகுளுக்கு அப்பாற்பட்ட அமேசான், சிஸ்கோ, டெலாய்ட், மெக்கன்சி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் ஆன்லைன் நேர்காணல் முறையை நிறுத்தி, நேரில் மட்டுமே நேர்காணல் நடத்தும் நடைமுறையை துவங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
















