ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் பிறந்த லட்சுமி மேனன், மலையாளத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் தமிழில் சப்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மதுபான பார் அருகே, ஐடி ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில், அவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதன் பேரில், மிதுன், அனீஷ் மற்றும் சோனா என்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் நடிகை லட்சுமி மேனனும் சம்பவத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் விசாரிக்க திட்டமிட்டிருந்தாலும், தகவல் அறிந்த அவர் தலைமறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது போலீசார் தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், லட்சுமி மேனன் தற்போது தமிழில் யோகி பாபுவுடன் மலை படத்தில் நடித்துள்ளார். மேலும், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த சிப்பாய் படம் பாதியிலேயே நின்று போனது. பிரபுதேவாவுடன் நடித்த யங் மங் சங் படம் பல ஆண்டுகளாக வெளிவராமல் காத்திருக்கிறது.


















