பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோன் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரித்தி சிங் என்ற நபர், இருவரும் நடித்த ஹூண்டாய் கார் விளம்பரத்தை பார்த்து வாகனம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால், வாங்கிய நாள் முதலே கார் முறையாக இயங்கவில்லை என்றும், இதுகுறித்து நிறுவனத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தை அணுக, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹூண்டாய் நிறுவனத்துடன் நடிகர் ஷாருக்கான் பல ஆண்டுகளாக பிராண்ட் தூதராக இணைந்துள்ளார். 2023ஆம் ஆண்டு நடிகை தீபிகா படுகோனும் அந்த நிறுவனத்தின் பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இருவரும் நடித்த விளம்பரத்தை பார்த்து கார் வாங்கி, அது சரியாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.