மதுரை மாநாட்டில் தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் மீது முதல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் மாநாட்டில் பங்கேற்றனர். அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் மேடைக்கு செல்வதற்காக சிறப்பாக அமைக்கப்பட்ட ரேம்ப் வாக் வழியே வந்தார்.
அந்த நேரத்தில், ஒரு தொண்டர் மேடைக்கு ஏறி விஜயை அணுக முயன்றார். உடனே அங்கிருந்த பவுன்சர்கள் அந்த தொண்டரை வலுக்கட்டாயமாக தூக்கி வீசியுள்ளனர். சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தூக்கி வீசப்பட்ட தொண்டரான சரத்குமார் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து குன்னம் போலீசார் நடிகர் விஜய் மற்றும் 10 பவுன்சர்களுக்கு எதிராக 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்ற வழக்கு எண் 346/2025 ஆகும். இதில் கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட குற்றப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்த வழக்கில் நடிகர் விஜய் முதன்மை குற்றவாளியாக (A1) பெயரிடப்பட்டுள்ளார். மற்ற 10 பவுன்சர்கள் இணை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடம் மதுரை கூடகோவில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வருவதால், வழக்கு தற்போது குன்னம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து மதுரை கூடகோவில் போலீசாருக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.