சென்னை :
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் செலவாக அல்ல, சமூக முதலீடாக கருதப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில், நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியபோது, “இங்கே வந்து குழந்தைகளுடன் சாப்பிட்டதில் எனக்கும் குழந்தை மாதிரி எனர்ஜி வந்துவிட்டது. இன்று மனதுக்கு நிறைவான நாள். 20 லட்சம் குழந்தைகள் ஒரே நாளில் காலை உணவு சாப்பிடுவதை விட வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. பசியும், பிணியும், பகையும் இல்லாத நாடே சிறந்த நாடு” என்றார்.
“செலவு அல்ல, முதலீடு”
“பல குழந்தைகள் பள்ளிக்கு பசியுடன் வருவதாக கூறப்பட்டது. அதனால்தான் இந்த திட்டத்தை அறிவித்தேன். ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடியில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஆனால் இதை செலவு என்று சொல்ல முடியாது. இது எதிர்கால தலைமுறைக்கான சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட்” என்று வலியுறுத்தினார்.
ஆரோக்கியமும், கல்வித் தரமும் உயர்வு
“காலை உணவு திட்டம் தொடங்கிய பிறகு, குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்வது குறைந்துள்ளது. பள்ளி வருகை அதிகரித்துள்ளது. கற்றல் திறனும் முன்னேற்றமடைந்துள்ளது. பசி காரணமாக சோர்வுடன் பள்ளிக்கு வரும் நிலை இப்போது இல்லை” என முதல்வர் குறிப்பிட்டார்.
“குழந்தைகளே எங்கள் எதிர்காலம்”
“கனடா போன்ற முன்னேற்ற நாடுகள் இன்று காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால் நாமோ, அவர்களுக்கு முன்னதாகவே செயல்படுத்தி வருகிறோம் என்பது பெருமை. மாணவர்கள் நல்லா சாப்பிட்டு, நல்லா படிக்க வேண்டும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீங்கள் எங்களுக்கு எல்லாமே; எப்போதும் உங்களுக்காகவே நாங்கள் இருப்போம்” எனக் கூறி குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
















