மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது ஆன்லைன் கலந்தாய்வு (Counselling) மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மருத்துவப் படிப்பில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி, இடைத்தரகர்கள் பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து பொதுமக்களை எச்சரித்த காவல் ஆணையர் அருண், “மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம். அவர்கள் வழங்கும் போலி வாக்குறுதிகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள், கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொள்ளவும், அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் சேர்க்கை மையங்களை மட்டுமே தொடர்புகொள்ளவும் காவல் ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார்.

















