அலாஸ்காவில் நடைபெறவுள்ள அமெரிக்கா – ரஷ்யா அதிபர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 25% வரி விதித்து வந்தது. மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது. இதனால், இந்தியாவுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து, அலாஸ்காவில் நாளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பில் முடிவு எட்டப்படாவிட்டால், ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட், “இந்தியாவுக்கு ஏற்கனவே வரி விதிக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லையெனில், மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.